தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்ற முதல்-அமைச்சர் விஜய், 12-ந்தேதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்றார். தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அங்குள்ள ‘ரேஸ் கண்ட்ரோல்’ மற்றும் ‘ரேஸ் சர்க்யூட்’ பகுதிகளை அவர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, 14-ந்தேதி லண்டனில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதம் மேற்கொள்ளப்பட்டன. வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் ரூ.15,300 கோடி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும், வரும் 22-ந்தேதி செயல்படுத்தப்பட உள்ள காலை உணவு திட்ட விரிவாக்கம் குறித்தும், 25-ந்தேதி தொடங்கப்பட உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான தேதி மற்றும் இடம் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.