லண்டன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆடவர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், பராகுவே நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ மார்காண்டனியோவை எதிர்கொண்டார். உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் வேலவன், 124-வது இடத்தில் உள்ள பிரான்சிஸ்கோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வேலவன், 11-5, 11-7, 14-12 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ்கோவை வீழ்த்தினார். இதன்மூலம், லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் வெற்றியைப் பதிவு செய்த வேலவன் செந்தில்குமார், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.