தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 6 நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய், இன்று நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள விஜய், கடந்த 10-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் சென்றடைந்த அவர், நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய நேரப்படி அப்போது காலை 11.30 மணி ஆகும். விமான நிலையத்தில் அவரை பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரைக்கண்ணன் மற்றும் பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து விஜய், லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள 'தி ஷார்ட்' கட்டிடத்தில் அமைந்துள்ள 'ஷாங்க்ரி-லா தி ஷார்ட்' ஓட்டலுக்கு சென்றார். இந்த ஓட்டலில்தான் அவர் தங்கியுள்ளார். ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான தி ஷார்டின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை இந்த ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறைகளில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் லண்டன் நகரின் காட்சிகளை ரசிக்க முடியும். ஓட்டலில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கியூட்டிவ் அறைகள் உள்ளன. விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதுடன், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும். மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சில்வர்ஸ்டோனில் கார் பந்தயம் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு விஜய் செல்கிறார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்திய நேரப்படி இந்த கார் பந்தயம் இரவு 9.45 மணிக்கு தொடங்கி, இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது. தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று விஜய் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் நடைமுறைகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட உள்ளார். மேலும், தமிழகத்திற்கான புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் விஜய் ஆய்வு செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை அவர் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.