பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டம் டொனாலோ பகுதியைச் சேர்ந்தவர் ஜபன்பிரீத் சிங். கடந்த 11-ம் தேதி இவரது கார் தீப்பிடித்து எரிந்ததில், வாகனம் முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, கார் தீ விபத்து தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்தை ஜபன்பிரீத் சிங் அணுகியுள்ளார். அப்போது, இந்த விபத்து குறித்து போலீசாரிடமிருந்து சான்றிதழ் பெற்று வருமாறு காப்பீட்டு நிறுவனம் அவரிடம் தெரிவித்துள்ளது. இதன்படி போலீஸ் நிலையத்துக்குச் சென்று சான்றிதழ் கேட்டபோது, அதனை வழங்குவதற்காக போலீசார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜபன்பிரீத் சிங், போலீஸ் நிலையத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.