தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது. இதேபோல், சென்னையில் உள்ள அவரது சகோதரர் வீட்டிலும் நடைபெற்ற சோதனை முடிவடைந்தது. ரூ.634 கோடி லஞ்சப் புகார் தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் கே.என்.நேரு. இத்துறையில் 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சமாகப் பரிமாறப்பட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு மனுத் தாக்கல் செய்தார். தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், மறுஆய்வு மனுவைத் திரும்பப் பெறவும் அனுமதி அளித்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 25 இடங்களில் சோதனை இந்தப் பின்னணியில், இன்று காலை திருச்சி மற்றும் சென்னையில் கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்பாக, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக தற்போதைய சோதனைகள் நடைபெற்றதாகத் தெரிகிறது. திருச்சியில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை 8 மணி நேரத்துக்குப் பிறகு முடிவடைந்தது. சென்னையின் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டில் சுமார் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அங்கிருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. “சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திசைதிருப்பவே சோதனை” சோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, இந்த நடவடிக்கை சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இன்றைய சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும், அதிகாரிகள் தன்னிடம் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தொடர்பாக அதிகாரிகள் தன்னிடம் கையொப்பம் பெற்றதாகவும் கூறினார். திருச்சி இடைத்தேர்தலில் தான் இல்லாவிட்டாலும் தி.மு.க.வினர் தொடர்ந்து பணியாற்றுவார்கள் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நடைபெற்ற சோதனைகளைப் போலவே தற்போதைய நடவடிக்கையையும் எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.