திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுடன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 19 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் உள்ள ரவிச்சந்திரனின் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், திருச்சி தில்லைநகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அரசு டெண்டர்களை பெறும் விவகாரங்களில், கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, திருச்சியில் நடைபெற்ற சோதனை குறித்து செய்தியாளர்களிடம் கே.என்.நேரு பேசினார். அப்போது, தனது வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றதாகவும், சோதனையின்போது எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அதிகாரிகளின் சோதனைக்கு தாங்கள் முழுமையாக ஒத்துழைத்ததாகக் கூறிய அவர், தன்னைப் பொறுத்தவரை எந்தத் தவறும் செய்யவில்லை என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடி, சட்டரீதியாக வெற்றி பெறுவோம் என்றும் கூறினார். தனது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு கோப்பும், வரவு-செலவு கணக்குகள் எழுதப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டும் மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கே.என்.நேரு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதால், தன்னை அச்சுறுத்தும் நோக்கத்திலும் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என அவர் கூறினார்.மேலும், இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தனது வீட்டில் ஏற்கனவே மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாகவும் கே.என்.நேரு குற்றம்சாட்டினார்.