தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பாமாயில் விநியோகிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளைக் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கடந்த ஜூன் 5-ம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் பணி ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 லட்சம் பாக்கெட்டுகளை வரும் 29-ம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. விநியோக ஒதுக்கீட்டில் பாரபட்சம் எனப் புகார் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகிப்பதற்கான ஒதுக்கீடு, நிறுவனங்கள் பெற்றுள்ள டெண்டர் அளவுக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் செய்யப்படவில்லை எனக் கூறி, கேடிவி ஹெல்த் புட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், 200 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க ஒப்பந்தம் பெற்ற எம்.ஜி.எம். நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளையும், 210 லட்சம் பாக்கெட்டுகளுக்கான ஒப்பந்தம் பெற்ற குமார் ஆக்ரோ நிறுவனம் 52 லட்சம் பாக்கெட்டுகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 180 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஒப்பந்தம் பெற்ற இன்டகரேட் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும், 360 லட்சம் பாக்கெட்டுகளுக்கான ஒப்பந்தம் பெற்ற தங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த விநியோக அளவைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, முதல் கட்ட விநியோகத்துக்கான பாக்கெட்டுகள் முறையான விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குறிப்பாக, அதிக அளவிலான பாக்கெட்டுகளை விநியோகிக்க ஒப்பந்தம் பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு 34 லட்சம் பாக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது எனக் கூறப்பட்டது. எனவே, பாமாயில் விநியோகம் தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனங்களுக்கு உரிய விகிதாசார அடிப்படையில் பாக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். சரவணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு விவரங்களையும் பரிசீலித்த நீதிபதி, பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த மாதம் 29-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.