பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி, நீண்டகாலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் அதிக வாகனப் போக்குவரத்து கொண்ட நெருக்கடியான பகுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் இல்லாத பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சிக் காலங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் சமூக நலன் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இத்தகைய சூழலில் கடன் பெற்று ரூ.1,200 கோடி செலவில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், புதிய தலைமைச் செயலகமே கட்டக்கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் நிதிநிலை சீரடைந்த பின்னர், போக்குவரத்து நெரிசல் இல்லாததுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போதைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.