சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நாச்சியூர் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், தாதாபுரத்தை சேர்ந்த ஹேமலதா விற்பனையாளராக பணியாற்றி வந்தார். ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான கருத்துகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி ஹேமலதா பணியில் இருந்தபோது ரேஷன் கடையில் திடீரென தீப்பற்றியது. இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கடையில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஹேமலதா தெரிவித்திருந்தார். இதையடுத்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரீல்ஸ் பதிவுக்காக ஹேமலதாவே மண்எண்ணெயை பயன்படுத்தி அரிசி மூட்டைக்கு தீ வைத்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஹேமலதா ரேஷன் கடைக்கு தீ வைத்துவிட்டு, அதை தீ விபத்து போல் காட்ட முயன்றது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹேமலதாவை பணியிடை நீக்கம் செய்து சேலம் பொன்னி கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் பாலமுருகன் நேற்று உத்தரவிட்டார்.