தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், தான் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களின் உரிமைகள் மூலம் ரூ.350 கோடி வர்த்தகம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து பெரிய பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரித்து வரும் நிலையில், அதன் அடுத்தடுத்த படங்களின் உரிமைகள் தொடர்பான விற்பனை தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. தகவல்களின்படி, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்'திரைப்படத்தின் உரிமைகள் ரூ.150 கோடிக்கும், அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'சண்டியர்' படத்தின் உரிமைகள் ரூ.125 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'சேயோன்' திரைப்படத்தின் உரிமைகள் ரூ.75 கோடிக்கு விற்பனையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று படங்களின் உரிமைகள் தொடர்பாக ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் வாயிலாக மொத்தம் ரூ.350 கோடி அளவிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அவற்றின் உரிமைகள் மூலம் இவ்வளவு பெரிய தொகைக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் தகவல் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், இந்தத் தொகைகள் மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த விவரங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமோ, ஹாட்ஸ்டார் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.