2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.2 கோடியே 23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் தனியார் பள்ளி உரிமையாளரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர் (50) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, வேலூர் டிட்டர் லைன் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஆதவன் பிரகாஷ் (58) என்பவருடன் குடியாத்தம் அருகே நிலம் வாங்கியபோது அறிமுகம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கரை தொடர்பு கொண்ட ஆதவன் பிரகாஷ், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் மெட்ரிக் பள்ளியுடன் 2 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த நிலத்தின் பத்திரத்தை சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.1.5 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், வட்டி சேர்த்து தற்போது ரூ.1 கோடியே 66 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும், பள்ளியுடன் கூடிய அந்த 2 ஏக்கர் நிலத்தை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் சங்கரிடம் தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய சங்கர், முதற்கட்டமாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 35 ஆயிரத்தை ஆதவன் பிரகாஷிடம் வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகையை நிலப்பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். பணத்தை வங்கியில் செலுத்திவிட்டதாக ஆதவன் பிரகாஷ்தெரிவித்தநிலையில்,சங்கர்பெயருக்குநிலத்தைபதிவுசெய்துகொடுக்காமல்தொடர்ந்துகாலதாமதம்செய்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த சங்கர் சென்னைக்கு சென்று சம்பந்தப்பட்ட தனியார் வங்கியில் விசாரித்துள்ளார். அப்போது, அந்த நிலத்தின் மீது ரூ.4 கோடியே 46½ லட்சம் கடன் நிலுவையில் இருப்பதும், இதுவரை ஆதவன் பிரகாஷ் அசல் மற்றும் வட்டி தொகை எதையும் செலுத்தவில்லை என்பதும் வங்கி அதிகாரிகள் மூலம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.விசாரணையில், நிலத்தை விற்பனை செய்வதாக கூறி சங்கரிடம் ரூ.2 கோடியே 23 லட்சம் மோசடி செய்ததாக ஆதவன் பிரகாஷ் மீது குற்றச்சாட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.