ராப்டி.எச்.வி. நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ராப்டி.எச்.வி. நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

ராப்டி.எச்.வி. நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

தமிழகத்தைச் சேர்ந்த மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராப்டி.எச்.வி. (Raptee.HV) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்-அமைச்சர் விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிறுவனத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் உள்ள ஓ.எம்.ஆர். சாலையில் மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ராப்டி.எச்.வி. நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 11) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மணப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ராப்டி.எச்.வி. நிறுவனம், மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் இந்நிறுவனம், இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். டெஸ்லா, விப்ரோ உள்ளிட்ட சர்வதேச வாகனத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற தமிழகப் பொறியாளர்களால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. எம்.ஐ.டி. குரோம்பேட்டை மற்றும் என்.ஐ.டி. திருச்சி கல்வி நிறுவனங்களில் பயின்ற இவர்கள், HV-TEC என்ற பிரத்யேக தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள T30 மோட்டார் சைக்கிள், இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிளாகும். 240 வோல்ட் மின்னழுத்தக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த வாகனம், மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் CCS2 வகை பொது DC விரைவு மின்னேற்றத் தரநிலையிலும் சார்ஜ் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை விரிவாக அறிந்துகொள்ளும் வகையில் புதிய அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செயல்பட்டு வந்த தொழிற்சாலை விற்பனை மையத்தைவிட மேம்பட்ட வசதிகளுடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிள்களை நேரில் பார்வையிடுவதுடன், அதன் 240 வோல்ட் உயர் மின்னழுத்த அமைப்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடவும், மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்து அதன் செயல்திறனை அனுபவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் புதிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் புதிய ஸ்டார்ட்அப் முதலீட்டுக் கொள்கையின் கீழ் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடக்கமாக ராப்டி எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.25 கோடியை கட்டாயமாக மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (CCPS) வடிவில் முதலீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்னிகுல் காஸ்மோஸ் உள்ளிட்ட மேலும் பல தொடக்க நிறுவனங்களிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.