நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடரின் டீசர் நாளை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநரான தர்மராஜ் ஷெட்டி, இத்தொடருக்கு கதை எழுதி இயக்கியுள்ளார். தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அக்கா’ தொடர் குறித்த அறிவிப்பு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் வெளியானது. தொடர்ந்து, 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெளியிடப்பட்டது. 1980-களில் தென்னிந்தியாவில் அமைந்துள்ள பெர்னூர் என்ற கற்பனை நகரத்தின் பின்னணியில் இத்தொடரின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆதிக்கம் நிறைந்த அந்தச் சமூகத்தில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்கள் குழுவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவர்களின் அதிகாரத்துக்கு வெளியிலிருந்து வரும் ஒருவரால் சவால் எழுவதும், அதைத் தொடர்ந்து ஏற்படும் மோதல்களும் விறுவிறுப்பான திரில்லர் பாணியில் இடம்பெறுகின்றன. நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்து வந்த இந்தத் தொடர், வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷும் ராதிகா ஆப்தேவும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளதால், இந்தத் தொடரின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘அக்கா’ வெப் தொடரின் டீசர் நாளை வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.