தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய நான்கு பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் ராஜினாமா தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையே, கட்சி மாறிய நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் எதிர்கால தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரி செல்வகுமார் என்பவர் கடந்த ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் அடிப்படை மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, செல்வகுமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.