ரஷியாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை சட்ட விதிகளை மீறுவதாகக் கூறி ஆளும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்காவே ரஷியாவிடம் இருந்து டீசல் வாங்குவதற்கான சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசல் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என்றும், நவம்பர் மாதத்தில் 5 லட்சம் டன்னும், அதற்குப் பிறகு 10 லட்சம் டன்னும் பெறப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷியாவின் சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தித் திறனைப் பொறுத்து, குறுகிய காலத்தில் கூடுதலாக 30 லட்சம் டன் டீசலை வழங்கவும் அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சட்டத்தை மீறுவதாக செனட்டர்கள் குற்றச்சாட்டு அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உக்ரைன் அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக முடிவுக்கு வரும் வரை, ரஷிய எரிசக்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டம் 2022-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு முரணாக டிரம்ப் அரசு செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வமான தன்மை குறித்தும் செனட்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். டீசல் இறக்குமதித் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய செனட்டர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் ஜீன் ஷாஹீன், ரிச்சர்ட் ப்ளூமெண்டல், ரான் வைடன் ஆகியோருடன் குடியரசுக் கட்சியின் சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, தோம் டில்லிஸ் ஆகியோரும் இந்த எதிர்ப்பில் இணைந்துள்ளனர். ரஷியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் நோக்கம், உக்ரைன் போருக்குப் பயன்படுத்தக்கூடிய நிதி அந்த நாட்டுக்குச் செல்வதைத் தடுப்பதே என்று செனட்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து டீசல் வாங்குவது அந்நாட்டுக்கு மறைமுகமாக நிதிப் பலன் அளிப்பதுடன், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தையும் மீறும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டிரம்ப் அரசின் விளக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அமெரிக்க மக்களைப் பாதிக்கும் தீவிர எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கம் என்றும் கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்வதற்கு டிரம்ப் அரசு எடுத்துள்ள முடிவு, எரிசக்தித் தேவைக்கும் ரஷியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைக்கும் இடையே புதிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற செனட்டர்களின் கோரிக்கை, டிரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் மற்றும் சட்டரீதியான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.