ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலுக்கு மாற்றாக வேறு வகை எண்ணெயை வழங்குவது குறித்து சட்டசபையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்தார்.சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பொள்ளாச்சி தொகுதி கொ.ம.தே.க. உறுப்பினர் நித்தியானந்தன் பேசினார். அப்போது, கேரளாவில் கொப்பரை தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவது போல், கூட்டுறவு அங்காடிகள் மூலமாகவும் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும்போது பில் போடுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை முறையாக அடையாளம் கண்டு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் வெங்கடரமணன், ரேஷன் கடைகளில் பில் போடுவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய சர்வர் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது என்றும் கூறினார்.ரேஷன் கடைகள் மட்டுமின்றி அம்மா உணவகங்கள், அங்காடி மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட திட்டங்களுக்காக மாதந்தோறும் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். ஆண்டுக்கு மொத்தம் 24 கோடி லிட்டர் பாமாயில் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தேங்காய் எண்ணெயை வழங்குவது குறித்து பேசிய அமைச்சர், ஒரு மாதம் வழங்கிவிட்டு அடுத்த மாதம் தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றார். சீரான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் தற்போது பாமாயிலுக்கு மாற்றாக வேறு எண்ணெயை வழங்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.எதிர்காலத்தில் மாற்று எண்ணெய்கள் தொடர்ந்து கிடைக்கும் சூழல் ஏற்பட்டால், அவற்றை நிச்சயமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.