ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் சண்டிகர் அணியை இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், பிரதோஷ் ரஞ்சன் பால் நிலைத்து நின்று விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 2-வது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதம் விளாசினார். இதையடுத்து தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சண்டிகர் அணியால் தமிழ்நாடு பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 37.3 ஓவர்களில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தமிழ்நாட்டை விட 477 ரன்கள் பின்தங்கியதால் சண்டிகர் அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தரப்பில் சோனு யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய சண்டிகர் அணியில் தொடக்க வீரர்களான அர்ஜுன் ஆசாத் 60 ரன்களும், மனன் வோரா 59 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கத் தவறியதால் அந்த அணி 64.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இரண்டாவது இன்னிங்சில் அஜித் ராம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, 4 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணி 3 வெற்றிகளையும் ஒரு டிராவையும் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.