தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் வாகன இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்களைப் பொருத்துவதற்கு ரூ.17.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், அவற்றின் இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (Vehicle Location Tracking Device), அவசர உதவி பொத்தான்கள் (Panic Buttons) ஆகியவற்றைப் பொருத்த ரூ.17.99 கோடி செலவிடப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், கடந்த 08.09.2026 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 13,490 பேருந்துகளில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளையும், 13,776 அவசர உதவி பொத்தான் தொகுப்புகளையும் நிறுவுவதற்கான நிதியை விடுவிக்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். AIS 140 தரநிலையின்படி அமைக்கப்படும் இந்தக் கருவிகள், மையக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்புடன் (Central Control Centre) இணைக்கப்படும். இதன் மூலம் பேருந்துகள் எங்கு செல்கின்றன, அவற்றின் வேகம் என்ன, திட்டமிட்ட வழித்தடத்தில் இயக்கப்படுகின்றனவா, அவசர எச்சரிக்கைகள் ஏதேனும் உள்ளனவா என்பன உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் கண்காணிக்க முடியும். இதனால் பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதும், தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதும் எளிதாகும். மேலும், பயணத்தின்போது ஆபத்து அல்லது அவசரச் சூழல் ஏற்பட்டால், பேருந்தில் உள்ள அவசர உதவி பொத்தானை அழுத்தி கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். இதன் மூலம் பேருந்து இருக்கும் இடத்தை உடனடியாகக் கண்டறிந்து, காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து விரைவான உதவியை வழங்க முடியும். பயணிகளின் பாதுகாப்பு, அவசரகால உதவி மற்றும் பேருந்துகளின் இயக்கக் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இத்திட்டம், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.