ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவானி, யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் மிக ஆடம்பரமான லாரிகளில் ஒன்றை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார். நீண்ட தூர லாரி பயணங்களின்போது நெடுஞ்சாலை ஓரங்களில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட உணவுகளை அவரே சமைத்து சாப்பிடுவது ராஜேஷின் வழக்கம். இதனை வீடியோவாக பதிவு செய்து, தனது மகன் சாகரின் உதவியுடன் ‘ஆர் ராஜேஷ் பிலாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். இந்த சேனலுக்கு தற்போது கிட்டத்தட்ட 3 மில்லியன் சந்தாதாரர்களும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளும் கிடைத்துள்ளன. லாரி ஓட்டுநராக மாதம் சுமார் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டிய ராஜேஷின் மாத வருமானம், யூடியூப் மூலம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயர்ந்தது. சில மாதங்களில் அவரது வருமானம் ரூ.18 லட்சம் வரை சென்றதாக கூறப்படுகிறது. யூடியூப் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு, நொய்டாவைச் சேர்ந்த வாகன கஸ்டமைசேஷன் நிபுணர்களான ப்ரோ கேம்பருடன் இணைந்து, ஆடம்பரமான லாரியை உருவாக்கும் தனது நீண்ட நாள் கனவை ராஜேஷ் நிறைவேற்றியுள்ளார். செப்டம்பர் 2026-ல் பணிகள் நிறைவடைந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வாகனத்தின் உட்புற மாற்றங்களுக்கு மட்டும் சுமார் ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. சாதாரண சரக்கு லாரியின் உட்புறம், சக்கரங்களில் செல்லும் சொகுசு வீட்டைப் போன்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதில் முழுமையான ஏசி வசதியுடன் கூடிய அறை, தனியாக வடிவமைக்கப்பட்ட படுக்கையறை, வசதியான உள்ளலங்கார இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் பல்வேறு பொருட்களை வைத்துக்கொள்ளும் வகையில் ஏராளமான சேமிப்பு அலமாரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணங்களின்போது ஓட்டுநருக்கு ஏற்படும் உடல் சிரமத்தை குறைக்கும் வகையில் சிறப்பு ஓட்டுநர் இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. தனது உணவு வ்லாக் வீடியோக்களை லாரிக்குள் இருந்தபடியே தொடர்ந்து படமாக்கும் வகையில் பிரத்யேக சமையல் பகுதியும் இந்த வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. சாதாரண லாரி ஓட்டுநராக இருந்து, யூடியூப் மூலம் முன்னேறி ஆடம்பரமான லாரியை உருவாக்கியுள்ள ராஜேஷ் ரவானியின் முயற்சியை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். தனது சமூக வலைத்தளப் பதிவில் ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அவரது பயணத்தை பாராட்டியுள்ளார். முயற்சி மேற்கொண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு ராஜேஷ் ரவானி சிறந்த உதாரணம் என நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.