யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்த 79 பேர் தேர்ச்சி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்த 79 பேர் தேர்ச்சி

யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்த 79 பேர் தேர்ச்சி

யு.பி.எஸ்.சி. நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், யு.பி.எஸ்.சி. நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளித்து வருகிறது. குறிப்பாக, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வில் பங்கேற்க இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 29 பேர் பெண்கள், 4 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். மேலும், முதன்முறையாக மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக ஒரு மாத கால சிறப்புப் பயிற்சி மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இம்மாதத்தின் கடைசி வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்தப் பயிற்சி மையத்தில் படித்து முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த பிற தேர்வர்களும் இம்மையம் நடத்தும் மாதிரி நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண், 9345766957 என்ற வாட்ஸ்-அப் எண் அல்லது aicscc.gov\@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.