தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் நலனுக்காக யார் செயல்படுகிறார்கள், அவை நடவடிக்கைகளுக்கு யார் இடையூறு ஏற்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நேரடியாக தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான வாக்குவாதங்கள், கேள்வி–பதில்கள், அமளி உள்ளிட்ட நிகழ்வுகள் தற்போது நேரலை ஒளிபரப்பு மூலம் பொதுமக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகின்றன. சமீபத்திய அமர்வுகளிலும் காவல்துறை மானியக் கோரிக்கை உள்ளிட்ட விவாதங்களின்போது இரு தரப்புக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டதுடன், வெளிநடப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இந்த சூழலில், நேற்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் பேசிய சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் வலியுறுத்தினர். ஆனால், முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அவர்கள் திரண்டு முழக்கமிட்டனர். இதையடுத்து, அவை காவலர்கள் மூலம் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவை காவலர்கள் வந்து திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இந்நிலையில், சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் மற்றும் நேரலை ஒளிபரப்பு குறித்து நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகளை நாகரிகமான மற்றும் ஆக்கபூர்வமான வழியில் முன்வைப்பதற்குப் பதிலாக, யார் மாநிலத்திற்காக பாடுபடுகிறார்கள், யார் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் தாங்களே பார்த்து முடிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபை நடவடிக்கைகளை ஒழுங்குடன் வழிநடத்தியதுடன், நிலைமையை உறுதியுடனும் நியாயமாகவும் கையாண்டதாகக் கூறி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு சிபி சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.