செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றவர் முகேன் ராவ். தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வரும் இவர், ‘வேலன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அண்மையில் வெளியான ‘ஜின்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மைலோ’. கவின் மூர்த்தி இயக்கியுள்ள இப்படம், லேப்ரடார் வகை செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குற்றச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை, அந்த நாயின் உதவியுடன் கதாநாயகன் எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறார் என்பதே படத்தின் மையக்கருவாகும். ‘செல்லப்பிராணி என்பதைத் தாண்டி, மௌன சாட்சி’ (More than a pet, a silent witness) என்ற வாசகம் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மர்மம் மற்றும் விசாரணையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, பிக்பாஸ் புகழ் ஜனனி, ஆதித்யா கதிர், இளவரசு, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே.ஐ. சுரேஷ் தயாரித்துள்ளார். சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ‘மைலோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும், திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.