கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் - உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் 14 இடங்களிலும், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 3 இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மேட்டுப்பாளையம் - உதகை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிலர் சிக்கினர். அவர்களில், கேரளாவில் இருந்து சுற்றுலா வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இருந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மண்சரிவில் சிக்கிய மாணவர்களை கயிறுகளின் உதவியுடன் மீட்ட அவர்கள், அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.