மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி தேவையில்லை: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
12 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி தேவையில்லை: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி தேவையில்லை: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எந்த மாநிலத்திடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய், கடந்த நவம்பர் 7-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், மேகதாது அணை திட்டம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக அரசு தனது எல்லைக்குட்பட்ட நிலத்தில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்பதுதான் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை. அதனை கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றும். தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டம் குறித்து நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த அணை அமைக்கப்படுவதால் தமிழகத்திற்குத்தான் அதிக நன்மை கிடைக்கும். குறிப்பாக, வறட்சி ஏற்படும் காலங்களில் தண்ணீரைச் சேமித்து வைக்க இந்த அணை உதவும். இத்திட்டத்திற்கு கர்நாடக பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்திற்கு மாற்றாக 5,400 ஹெக்டேர் நிலம் தற்போது அடையாளம் காணப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேகதாது அணை திட்டம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய், ஒரு குழுவைக் கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.