மெக்கா மீது தாக்குதல் நடத்தவில்லை; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

மெக்கா மீது தாக்குதல் நடத்தவில்லை; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு

மெக்கா மீது தாக்குதல் நடத்தவில்லை; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு

ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், மேற்காசியாவில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மெக்கா, ஜெட்டா, தைப் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இந்த சூழலில், மெக்கா நகரின் தெற்குப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரசு எச்சரிக்கை விடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியது. எனினும், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை சவுதி அரேபிய பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை சவுதி அரசு திரும்பப் பெற்றது. மத்திய கிழக்கில் போர் தொடங்கிய பின்னர், முதன்முறையாக மெக்காவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதனை ஹவுதி அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஹவுதி அமைப்பின் உறுப்பினர் ஹசீம் அல்-ஆசாத், மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது ஏற்கனவே கூறப்பட்டு வரும் பொய்யான தகவல் என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்பும் எழுந்ததாகவும் எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா சரீயும் சவுதி தரப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவை உருவாக்கப்பட்ட பொய்கள் எனக் கூறிய அவர், சவுதி ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்லாமிய புனிதத் தலங்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சவுதியின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த வாரம் சவுதியின் எண்ணெய் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தீ விபத்து ஏற்பட்டு சேதம் ஏற்பட்டதுடன், 73 பேர் காயமடைந்தனர்.