முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 116.70 அடியாக உயர்வு; நீர்வரத்து அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 116.70 அடியாக உயர்வு; நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 116.70 அடியாக உயர்வு; நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. இந்த அணையின் நீரை நம்பி, தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமாக, முதல் போக நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத முதல் வாரத்தில் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் இதுவரை பாசனத்திற்காக நீர் திறக்கப்படவில்லை.இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலத்தின் பெரியாறு, தேக்கடி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது கனமழை தொடர்கிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 2,650 கனஅடியில் இருந்து 6,100 கனஅடியாக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 113.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நீர்வரத்து அதிகரித்ததன் விளைவாக நேற்று 116.70 அடியை எட்டியது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சுமார் 3 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையில் 2,033 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இருப்பினும், பாசனத்திற்காக இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.