முரசு புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் பலத்த மழையும் காற்றும் வீசிய நிலையில், ரெயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களுக்குச் செல்லும் பல ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மத்தியமேற்கு வங்கக்கடலில் உருவான முரசு தீவிர புயல், நேற்று (நவம்பர் 2) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. தொடர்ந்து இன்று (நவம்பர் 3) அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் தெற்கு ஆந்திரக் கடற்கரையில் நெல்லூர் - நர்சாப்பூர் இடையே, ஒங்கோலுக்கு அருகில் கரையைக் கடந்தது. இதையடுத்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், இன்று மதியத்திற்குள் வலுவிழந்து சாதாரண புயலாக மாறும் என்றும், நள்ளிரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வலுவிழந்த புயலின் தாக்கத்தால் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தென் தமிழகப் பகுதிகளுக்கு மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரசு புயல் கரையைக் கடந்தபோது ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் தாக்கம் ரெயில் போக்குவரத்திலும் எதிரொலித்துள்ளது. வடமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரெயில்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். மொத்தம் 29 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் விரைவு ரெயில், சுமார் 12 மணி நேரமாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 1.46 மணி முதல் சிராலா - ஓங்கோல் இடையே நிறுத்தப்பட்டுள்ள இந்த ரெயில், காலை 8 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டியிருந்தது. ஆனால், புயல் பாதிப்பால் பயணிகள் நீண்ட நேரமாக ரெயிலுக்குள்ளேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, முரசு புயலின் தாக்கத்தை முன்னிட்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லூர் - ஓங்கோல் இடையே கரையைக் கடந்த முரசு புயல், தற்போது விஜயவாடா அருகே மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.