சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், முரசு புயல் காரணமாக அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து, காசிமேட்டைச் சேர்ந்த 4 மீன்பிடிப் படகுகள் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டன. அவற்றில் 3 படகுகள் ராமாயப்பட்டணம் துறைமுகத்திலும், மற்றொரு படகு நிஜாம்பட்டணம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நிஜாம்பட்டணம் துறைமுகத்தில் இருந்த படகில் பயணித்த 9 மீனவர்கள், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல், ராமாயப்பட்டணத்தில் தங்கியிருந்த தங்களது சக மீனவர்களுடன் இணைவதற்காகப் புறப்பட்டனர். அப்போது, வழியில் முரசு புயலின் தாக்கத்தில் சிக்கிய அவர்களது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து 9 மீனவர்களும் மாயமானார்கள். அவர்களை மீட்கும் நோக்கில் கடந்த 3 நாட்களாகத் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, காசிமேடு மீனவர்களின் படகு கொத்தாபுரம் கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்த நிலையில் கிடப்பதை கடலோரக் காவல் படையினர் கண்டறிந்தனர். பின்னர் அந்தப் படகு கொத்தாபுரம் கடற்கரைக்கு இழுத்து வரப்பட்டது. தற்போது, மாயமான 9 தமிழக மீனவர்களில் 4 பேரின் உடல்கள் ஆந்திரக் கடற்கரையில் கரை ஒதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முரசு புயலில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.