விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முயல் வேட்டைக்குச் சென்ற கூலித் தொழிலாளி, விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாருக்கு பயந்து அவரது உடலை ஏரியில் வீசியதாகக் கூறப்படும் விவசாயப் பணியாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியைச் சேர்ந்த அழகேசன் (70) என்பவருக்குச் சொந்தமாக, திண்டிவனம் அருகே மேல்சிவிரி கிராமத்தில் விளைநிலம் உள்ளது. அங்கு தைல மரங்கள் வளர்க்கப்படுவதுடன், மணிலாவும் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தில் நீர்ப்பாசனம் மற்றும் பராமரிப்புப் பணிகளை அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (56) கவனித்து வந்தார். மணிலா பயிர்களை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பச்சையப்பன் (37), முயல் மற்றும் நண்டுகளைப் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை மேல்சிவிரி பகுதிக்குச் சென்றார். அப்போது, விளைநிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வயலுக்கு வந்த சங்கர், மின்வேலியில் சிக்கி பச்சையப்பன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிப்பார்கள் என்ற அச்சத்தில், பச்சையப்பனின் உடலைத் தூக்கிச் சென்று சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆத்திபாக்கம் கிராம ஏரியில் வீசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஏரியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்திப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி ராணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சங்கரிடம் மேற்கொண்ட விசாரணையில், முயல் வேட்டைக்கு வந்த பச்சையப்பன் மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததும், போலீசாருக்கு அஞ்சி அவரது உடலை ஏரியில் வீசியதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளர் அழகேசன் மற்றும் சங்கர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பச்சையப்பனுக்கு அய்யம்மாள் (35) என்ற மனைவியும், ராஜமாணிக்கம் (7), ஜீவா (4), ராஜேஷ் (2) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.