முன்ஜாமீன் மனு தள்ளுபடி... கைதாகிறாரா அன்பில் மகேஸ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முன்ஜாமீன் மனு தள்ளுபடி... கைதாகிறாரா அன்பில் மகேஸ்

முன்ஜாமீன் மனு தள்ளுபடி... கைதாகிறாரா அன்பில் மகேஸ்

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவது, பள்ளிகளைத் தரம் உயர்த்துவது உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை முறைகேடாக வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி, அவருக்குச் சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில், அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், அன்பில் மகேஸை போலீசார் கைது செய்வார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.