கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றி வந்த 23 வயது இளம் பெண்ணை கத்தியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று வழக்கம்போல் இளம்பெண் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர் திடீரென அவரை கத்தியால் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தோஷை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தோஷ் வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் முதல்வர் மருந்தகத்துக்குள் புகுந்து இளம் பெண் ஊழியர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.