தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் காலை 10.30 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய் திரையுலக புகழ் மற்றும் கவர்ச்சியை பயன்படுத்தி மக்களை ஈர்த்ததாகவும், சமூக வலைதளங்கள் மூலம் தவறான பிம்பத்தை உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை ஏமாற்றி குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை கைப்பற்றியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி ஆதரவை பெற்றதாகவும், அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்றவில்லை என்றும், சில வாக்குறுதிகளை மட்டுமே முழுமையின்றி செயல்படுத்தி வருவதாகவும் திமுக தெரிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி செயல்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாகவும் திமுக தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களில் தவெக நிர்வாகிகள் சிக்கி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது. ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருவதாகவும், அதிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் வகையில் சட்டப்பேரவையை தனது அரசியல் பேச்சுக்கான மேடையாக முதல்-அமைச்சர் விஜய் பயன்படுத்தி வருவதாகவும் திமுக விமர்சித்துள்ளது. மேலும், திமுக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முரசொலி மாறன் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து சட்டப்பேரவையில் விஜய் பேசிய விதத்திற்கும் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இளம் வயதில் MISA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் விஜய் பேசியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விஜய்யின் பேச்சு சட்டப்பேரவையின் மாண்பு, மரபு மற்றும் வரலாற்றை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சட்டப்பேரவையில் சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, பின்னர் அவற்றை மீம்ஸ் மற்றும் ரீல்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், நேரலை மூலம் மக்களை சென்றடைந்த பின்னர் அவைக்குறிப்புகளில் இருந்து அந்தப் பேச்சுகளை நீக்குவதாகவும் திமுக தெரிவித்துள்ளது. ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், தரக்குறைவான பேச்சுகளை முதல்-அமைச்சர் விஜய் பேசி வருவதாகவும் திமுக தனது அறிக்கையில் விமர்சித்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் சட்டப்பேரவை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 12.09.2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் பங்கேற்று, முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்ப வேண்டும் என திமுக கேட்டுக்கொண்டுள்ளது.