செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ந்தேதி நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் நா.த.க. என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் முதல்-அமைச்சர் விஜய் கடந்த செப்டம்பர் 26-ந்தேதி ஆத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, நாளை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தாராபுரம்-உடுமலை சாலையில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் பிரசார மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விஜயின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து சாலை வழியாக தாராபுரம் வரும் விஜய், பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார். இதனால் அவர் பயணிக்கும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தாராபுரத்தில் முகாமிட்டு பொதுக்கூட்டத்திற்கான பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மேலும், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிரசாரத்தின் இறுதி நாளான அக்டோபர் 4-ந்தேதி விஜய் ரோடு ஷோ நடத்தி வாக்குசேகரிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.