ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: முதல்-அமைச்சர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். வரலாற்றில் தடம் பதிக்கும் தலைவராகவும், இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விளங்கி வருகிறார். வெற்றித் தலைவர் மற்றும் தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில், அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை வழங்கும் நோக்கில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட வீணாகாமல், பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் வலியுறுத்தி வரும் முக்கிய கருத்தாகும். உணவு உற்பத்தியைப் பொறுத்தவரை, தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவைவிட கூடுதலாகவே பல்வேறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் இலக்காக, தற்போதைய தேவையைவிட இருமடங்கு அளவில் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் அந்தந்த சிவில் சப்ளை கார்ப்பரேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தானியங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தும் தேவையான அளவில் போதுமான இருப்பில் உள்ளன. எனவே, உணவுப் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.