சென்னை தண்டையார்பேட்டையில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அண்ணாமலை தெரிவித்த விமர்சனத்துக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறுகையில், அண்ணாமலையை ஒரு முதிர்ந்த அரசியல்வாதியாக தாம் கருதியதாக தெரிவித்தார். பா.ஜ.க.வில் 8 ஆண்டுகள் இருந்ததுடன், மாநிலத் தலைவர் பொறுப்பையும் வகித்தவர் என்றும், ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் குறிப்பிட்டார். அப்படிப்பட்டவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வெளியாகியிருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக பெரிய அளவில் போட்டி நிலவி வரும் சூழலில், ஒரு ரூபாய் முதலீடு வந்தாலும் அது தமிழ்நாட்டுக்கான முதலீடுதான் என்றும் மரிய வில்சன் தெரிவித்தார். முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதை கேலி செய்வதும், கிண்டல் செய்வதும் சரியல்ல என்றும் அவர் கூறினார். மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் வரி வசூல் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது தமிழகத்தில் ஊழலின்றி வரி வசூல் நடைபெறுவதாகவும் மரிய வில்சன் தெரிவித்தார். தமிழகத்தில் வெளிப்படையான மற்றும் தூய்மையான நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஊழல் இல்லாத சூழல் காரணமாக பத்திரப்பதிவு மேற்கொள்ள அதிகளவில் மக்கள் வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் கடன் அளவை குறைத்து வருவதாகவும், அரசு பெறும் கடன் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறினார். அதே நேரத்தில், தமிழக அரசின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.