தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய விவகாரம் தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முடிவுக்கு வந்த வழக்கை மீண்டும் எடுத்துப் பேசுவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது, கட்சி நிதி பெற்றது தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.விஜய்யின் இந்த பேச்சை சட்டசபை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.மேலும், சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவைக் காவலர்கள் சில தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.இந்தச் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனிடம், முதல்-அமைச்சர் விஜய்யின் சட்டசபை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த துரைமுருகன், விஜய்யின் பேச்சை கம்யூனிஸ்ட் கட்சிகளே கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சர்க்காரியா ஆணையம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தங்களை நிரபராதிகள் எனத் தெரிவித்துவிட்டதாக கூறிய அவர், ஏற்கனவே முடிந்துபோன வழக்கை மீண்டும் பேசுவது முட்டாள்தனம் என்றும் விமர்சித்தார்.மேலும், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சு அநாகரிகமானது என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.