சட்டசபையில் அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபை விதிகளுக்கு மாறாக அவர் பேசியதாக கூறிய திமுக உறுப்பினர்கள், அந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவைக்காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதல்-அமைச்சர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், அது தொடர்பான விவரங்களை சட்டசபையில் விவாதிக்கக் கூடாது. ஆனால், முதல்-அமைச்சர் விஜய் அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா குறித்து சட்டசபை விதிகளுக்கு மாறாக பேசியுள்ளார்.மேலும், சர்க்காரியா கமிஷன் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அமலாக்கத்துறையின் அறிக்கையை படித்துவிட்டு மிசா குறித்து பேசும்போது, தனது உடல் மொழியையும் வெளிப்படுத்தினார். அந்த வகையில், மு.க.ஸ்டாலின் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல்-அமைச்சர் பேசியதாக நாங்கள் கருதுகிறோம்.எனவே, முதல்-அமைச்சர் பேசிய கருத்துகளை சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டோம். ஆனால், எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து அவைக்காவலர்களை அழைத்து எங்களை வெளியேற்றினர்.சபாநாயகர் இதுவரை நடுநிலையுடன் செயல்பட்டு வந்தார். ஆனால், இன்று அவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார். சட்டசபையில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் நடைபெற்றது ரியல் ஆட்சி. தற்போது நடைபெறுவது ரீல்ஸ் ஆட்சி” என்றார்.