மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா குடமுழுக்கு நிகழ்வில் தமிழ்ச் சமய மரபுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலை, கட்டடக்கலை மற்றும் சைவ மரபின் முக்கிய அடையாளமாக விளங்கும் இக்கோவிலின் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ்ச் சமய மரபுகளுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இது வெறும் மொழி சார்ந்த கோரிக்கை அல்ல. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ்ச் சைவ பக்தி இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் இறைநம்பிக்கையுடன் இணைந்துள்ளன. எனவே, மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுகளில் தமிழ்ச் சைவ மரபுகள் முழுமையாக இடம்பெற வேண்டும். இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, சமஸ்கிருத வேதங்கள் ஓதப்படும் இடங்களில் தமிழ்த் திருமுறைகளை ஓதும் ஓதுவார்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் தமிழ்த் திருமுறைகள் மற்றும் சைவ மந்திரங்களை ஓதுவதற்கும் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடந்த காலங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் குடமுழுக்குகளில் தமிழ் மந்திரங்களை ஓதிய ஓதுவார்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தற்போதைய குடமுழுக்கிலும் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். இதனால், கருவறை வழிபாடு, யாகசாலை நிகழ்வுகள், கோபுரக் கலசங்களுக்கு புனித நீராட்டு உள்ளிட்ட முக்கிய சடங்குகளில் தமிழ் ஓதுவார்களின்பங்கேற்பு பெயரளவில் மட்டுமே இருக்காமல், நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழில் வழிபடும் உரிமையை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இனிமேலும் தொடரக்கூடாது என்றும், கோவில்களின் வழிபாட்டு நடைமுறைகளில் தமிழுக்கு வழங்க வேண்டிய இடம் குறித்து அரசு நிரந்தரமான, தெளிவான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழில் இறைவனைப் போற்றிய நாயன்மார்களின் பக்தி மரபு தொடரும் இந்த மண்ணில் தமிழ்த் திருமுறைகள் ஒலிப்பது புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைய, சடங்குகள் முறைப்படி நடைபெறுவதுடன் தமிழ்ச் சைவ மரபுகளுக்கும் முழுமையான இடம் அளிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் நோக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கு உரிய இடம், வாய்ப்பு மற்றும் மரியாதையை உறுதி செய்ய வேண்டும் என்றும், குடமுழுக்கு நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்ச் சைவ மரபுகளுக்கும் திருமுறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசையும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.