மீனாட்சி அம்மன் கோவில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்கிறது: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Jul 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Jul 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மீனாட்சி அம்மன் கோவில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்கிறது: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

மீனாட்சி அம்மன் கோவில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்கிறது: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனுடன் இணைந்துள்ள உபகோவில்களின் சொத்துகளை பாதுகாத்து பராமரிக்கவும், கோவிலின் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிடக் கோரி திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், 2021-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியிருந்தார். அதன்படி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை, பிரசாதம் தயாரிக்கும் சமையலறையின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், புதிய நவீன சமையலறை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.இதற்கு பதிலளித்த மனுதாரர், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்றும், தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வசூலிக்க வேண்டிய தொகைகளும் இன்னும் வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இரு தரப்பின் வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.