மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலத்தில் மதுரை... பக்தர்கள் திரளாக வருகை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலத்தில் மதுரை... பக்தர்கள் திரளாக வருகை

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலத்தில் மதுரை... பக்தர்கள் திரளாக வருகை

மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பெருவிழா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை தொடங்கி நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடைசியாக 2009 ஏப்ரல் 8ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம மரபின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டிய நிலையில், வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்த விழா தாமதமானது. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து வீரவசந்தராயர் மண்டபம் கடந்த மாதம் 30ஆம் தேதி பக்தர்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. மேலும், ராஜகோபுரம் உள்ளிட்ட கோவிலின் பல பகுதிகளில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (வியாழக்கிழமை) மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. யாகசாலையில் சிறப்பு பூஜைகள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடக்கு ஆடி வீதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 11ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 8ஆம் கால யாக பூஜையும், மாலை 9ஆம் கால யாக பூஜையும் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் தொடர்ந்து யாக பூஜைகளை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு 10ஆம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வேள்விகள் நடைபெற்ற பின்னர், காலை 5 மணியளவில் பரிவார தெய்வங்களுக்காக யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 414 பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் பூஜைகள் நிறைவடைந்ததும் டங்கா மாடு, யானைகள், மேளதாளங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் யாகசாலையிலிருந்து ஊர்வலமாக அனைத்து பரிவார சன்னதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. அதன் பின்னர் ஒவ்வொரு பரிவார தெய்வத்திற்கும் புனிதநீர் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று மாலை 11ஆம் கால யாக பூஜை இன்றைய மாலை 11ஆம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், ராஜகோபுரங்கள் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கான கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. நாளை மகா கும்பாபிஷேகம் விழாவின் முக்கிய நாளான நாளை அதிகாலை 4 மணியளவில் 12ஆம் கால யாக பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு, 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு, 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மதுரை முழுவதும் விழாக்கோலம் மகா கும்பாபிஷேகத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக சென்னை, போடி, ராமேசுவரம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து மதுரைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோவில் ராஜகோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூங்காநகரான மதுரை முழுவதும் திருவிழா சூழலில் காட்சியளிக்கிறது.