மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 17-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 6-ந் தேதி தொடங்கிய பூர்வாங்க பூஜைகள், நேற்று முன்தினம் காலை நிறைவடைந்தன. தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாகசாலை பூஜை, கோவிலின் வடக்காடி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் 108 வகையான மூலிகைகள் பயன்படுத்தி ஹோமம் வளர்க்கப்பட்டது. சுமார் 400 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கினர். பூஜையின் நிறைவில் மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில் சிறப்பு சந்தி, விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், 2-ம் கால யாக வேள்வி மற்றும் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு மேல் 3-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. அப்போது ஓதுவார்கள் வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணம் பாடினர். தொடர்ந்து விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், 3-ம் கால யாக வேள்வி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் யாகசாலை பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்ய பக்தர்கள் தொடர்ந்து கோவிலுக்கு வருகை தருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து யாகசாலை பூஜைகளை பக்தர்கள் பார்வையிட்டு வழிபட்டு வருகின்றனர். யாகசாலையில் விநாயகர், முருகன், சிவன்-பார்வதி மற்றும் கிளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இவர்களுக்கு மீனாட்சி கோவில் சுவாமிநாதன் பட்டர் அலங்காரம் செய்திருந்தார். மூலவர் தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால், அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகளை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி 4 ஆடி வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன.