ஒருவரின் விருப்பத்துக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க த.வெ.க. அரசு எடுத்துள்ள முடிவு, மீனவர்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிராக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவு அளிப்பதாகவும், அரசு தனது முடிவை திரும்பப் பெறும் வரை மீனவர்களுடன் திமுக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம் அமைக்க பல்வேறு இடங்கள் உள்ளதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரால் தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அங்கு செயல்படும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடலை நோக்கியபடி முதலமைச்சர் அலுவலகம் அமைய வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியதன் காரணமாகவே பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் ஏராளமான பள்ளிகள் இருப்பதாகவும், அப்பகுதியில் ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகம் அமைய உள்ள பகுதிக்கு தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்களும், வடக்கில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருப்பதாகவும், முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் அரசுக்கு அளித்துள்ள கடிதத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் போராட்டங்களையும் மீறி அரசு தனது முடிவில் உறுதியாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் திமுகவும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் பட்டினப்பாக்கம் கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களுக்காக புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனிவாசபுரத்தில் உள்ள 1,356 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் தற்போது சிதிலமடைந்துள்ளதாகவும், அப்பகுதியில் சுமார் ஆயிரம் குடிசைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடல்சீற்றத்தால் அங்கு வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பற்ற சூழலிலும் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க முந்தைய திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்ட இடத்தில்தான் தற்போது ரூ.1,200 கோடி மதிப்பில் தலைமைச் செயலகம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், “விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கோரப்பட்டுள்ளது; முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று த.வெ.க. அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மீனவர்களின் கோரிக்கையை அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்தப் பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகள் கட்டித் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டால், மீனவர்களுடன் இணைந்து திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.