சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு வரும் நவம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் தொடர்ந்து நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் நயன்தாரா, ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவையும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இதனிடையே, பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு புரோமோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் ரஜினிகாந்துக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ‘தர்மன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குநர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அன்றைய தினம் படத்தின் டீசர் அல்லது முக்கிய முன்னோட்டக் காட்சி வெளியாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி நீண்ட நாட்கள் நடைபெற உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி நிறைவடைந்தால், ‘தர்மன்’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.