தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவதற்காக தீவிரமாக தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்காவின் 18 பேர் கொண்ட முதன்மை அணியில் நோர்க்யாவும் இடம்பெற்றுள்ளார். இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடங்குகிறது. நோர்க்யா கடைசியாக 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடும் நோக்கில் அவர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நீண்ட காலமாகவே சிவப்பு பந்து போட்டிகளுக்காக என்னைத் தயார்படுத்தி வருகிறேன். எனது பந்துவீச்சு முறையை படிப்படியாக மேம்படுத்துவதுடன், நீண்ட நேரம் தொடர்ந்து பந்துவீசுவதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன்” என்றார். மேலும், “வெள்ளை பந்து கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் தொப்பியை அணிவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நோர்க்யா, 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதால், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.