தேசிய அளவில் நடைபெற்ற ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ அழகிப் போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண் தேஜா மூன்றாம் இடத்தைப் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ போட்டி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடும் போட்டிக்கு மத்தியில் கும்பகோணத்தைச் சேர்ந்த தேஜா மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடலிங் துறையில் செயல்பட்டு வரும் தேஜா, இதற்கு முன்பு மூன்று மாவட்ட அளவிலான பட்டங்களையும், இரண்டு மாநில அளவிலான பட்டங்களையும் வென்றுள்ளார். தற்போது தேசிய அளவிலான போட்டியிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார். தனது வெற்றி குறித்துப் பேசிய தேஜா, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மாடலிங் துறை தொடர்பான விழிப்புணர்வும், சரியான வழிகாட்டுதலும் போதிய அளவில் இல்லை என்று கூறினார். மேலும், மாடலிங் துறையில் சாதிக்க விரும்பும் தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு உரிய பயிற்சி வழங்கும் வகையில், தமிழக அரசு தனிப்பட்ட பயிற்சி நிறுவனங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.