திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருப்பது உண்மை என தெரிவித்தார். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே அமைச்சர்கள் பதிலளித்து வருவதாகவும், அதிகாரிகள் உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறினார். மேலும், திமுகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறானது என அவர் தெரிவித்தார். விசிக துரோகம் செய்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்க திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பதவிக்காகவே விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருவதாகவும் திருமாவளவன் கூறினார். இறுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை விரைவில் சீராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.