திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஓவிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவிகள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. மேலும், சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் பேரில், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.