தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் ராமனுக்கு வழங்கப்பட வேண்டிய ஆய்வு செலவினத் தொகை மற்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கான வாழ்வாதாரச் செலவினத் தொகை உள்ளிட்ட நிதிகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நிதி கிடைக்காததால், தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு இடையே மாணவர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடங்கியதில் இருந்து ஜனநாயக சக்திகள் மற்றும் சமூகநீதியில் அக்கறை கொண்ட பல்வேறு இயக்கங்கள் மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. மேலும், அரசுக்கு எழுத்துப்பூர்வமாகவும் தனிப்பட்ட முறையிலும் கோரிக்கைகளை முன்வைத்து, பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர் பா.இரஞ்சித், சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர் ஆகியோரைத் தொடர்புகொண்டு, மாணவரின் நிலை குறித்தும், அவரது ஆய்வுப் பணிகள் பாதிக்கப்படாமல் நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவரைத் தொடர்புகொண்டு, நிதியை அவருக்கு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஒரு மாணவர் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் பல மாதங்கள் போராடி, பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட பிறகே நிதியை வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய சூழல் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அரசு முன்கூட்டியே உரிய நடைமுறைகளை வகுத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தனது கல்வி மற்றும் ஆய்வின் எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் மாணவர் வீடியோ வெளியிடும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் எந்த மாணவருக்கும் ஏற்படாத வகையில், அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உரிய காலத்தில் தடையின்றி மாணவர்களைச் சென்றடைய நிலையான நடைமுறையை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், பாரதிதாசன் ராமனுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதுடன், இனி எந்த மாணவரும் இதுபோன்ற நிதிக்காக அலைக்கழிக்கப்படாத வகையில் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.