தலித் மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாத விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, இயக்குநர் போஸ் வெங்கட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களாக தனக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும், இதனால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கவலை தெரிவித்து, மாணவருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தினர். இதனிடையே, மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட காணொலி முழுமையாக உண்மைக்கு மாறானது என தமிழக சமூக நீதித்துறை விளக்கம் அளித்தது. மாணவரின் படிப்புக்காக ஏற்கனவே ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.19.50 லட்சம் செலவினக் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக இயக்குநர் போஸ் வெங்கட் தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான கார் வழங்குவதாக அறிவித்துள்ள தவெக அரசு, மாணவர் பாரதிதாசனுக்கான கல்வி உதவித்தொகையை வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், “ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்குகேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா?” என திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.