மலைவாழ் மக்களுக்காக ‘குறிஞ்சி நலம்’ மருத்துவ சேவை: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மலைவாழ் மக்களுக்காக ‘குறிஞ்சி நலம்’ மருத்துவ சேவை: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

மலைவாழ் மக்களுக்காக ‘குறிஞ்சி நலம்’ மருத்துவ சேவை: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உயர் மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில், ‘குறிஞ்சி நலம்’ என்ற தன்னார்வ மருத்துவத் தொண்டு நிறுவனத்தை திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்நிறுவனத்தின் இலச்சினையையும் அவர் வெளியிட்டார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் முன்னெடுத்துள்ள இந்த முயற்சியின் தொடக்க விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, துணை அமைப்புச் செயலாளர் ப.தாயகம்கவி, மாநில மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சொக்கலிங்கம் மற்றும் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.2,000 மலைக்கிராமங்களில் மருத்துவ முகாம்கள் ‘குறிஞ்சி நலம்’ திட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சுமார் 2,000 மலைக்கிராமங்களில் 16 லட்சம் பழங்குடியின மக்கள் வசிப்பதாகத் தெரிவித்தார். மலைப்பகுதிகளுக்கிடையே போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதால், அங்கு வாழும் மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சைகளைப் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மலைப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மலைப்பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த முகாம்களில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, மக்களுக்குப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனர். ஓய்வுபெற்ற மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளை நடத்தி வரும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 20 மருத்துவர்களைக் கொண்டு இந்தப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கவும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவச் சேவைகள் கிடைக்க வழிவகை செய்யவும் இந்த அமைப்பு செயல்படும் என அவர் கூறினார். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் தொடர்ச்சியாக புதிய முயற்சி தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் 2021 ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் தொடங்கப்பட்டதை மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் நேரடியாக மருந்துப் பெட்டகங்களை வழங்கிய நிகழ்வுகளையும் அவர் நினைவுகூர்ந்தார். சித்தலப்பாக்கத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கும், திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியில் ஒரு கோடியாவது பயனாளிக்கும், ஈரோடு மாவட்டம் நந்தனாபுரத்தில் இரண்டு கோடியாவது பயனாளிக்கும் மு.க.ஸ்டாலின் மருந்துப் பெட்டகங்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார். இத்திட்டம் இரண்டரை கோடிக்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றடைந்துள்ளதாகவும், இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ‘United Nations Interagency Task Force Award’ விருது மூலம் தமிழகத்தின் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார். மலைப்பகுதி மக்களுக்கு அடிப்படை மருந்துகள் கிடைப்பதைத் தாண்டி, மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைகளையும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப் பெற்றுத்தருவதும் ‘குறிஞ்சி நலம்’ அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார். குரங்கணியில் முதல் மருத்துவ முகாம் ‘குறிஞ்சி நலம்’ அமைப்பின் முதல் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் குரங்கணி மலைக்கிராமத்தில் நடைபெற உள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, நவம்பர் 29ஆம் தேதி கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெறவுள்ள முகாம் மூலம் 54 மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் எனக் கூறினார். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சத்தியமங்கலம், ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் 2,000-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் 16 லட்சத்திற்கும் அதிகமான மக்களையும் இந்த மருத்துவச் சேவை சென்றடைவதே இலக்கு என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதிகளை எளிதில் கிடைக்கச் செய்வதோடு, அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், மருத்துவ விழிப்புணர்வை அதிகரிக்கவும் ‘குறிஞ்சி நலம்’ அமைப்பு செயல்படும் என அவர் விளக்கினார்.